சாளுவன்குப்பம் மகிஷாசுரமர்த்தினி திறந்தவெளி புடைப்புச் சிற்பம்
கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கு 5 கிமீ வடக்கே உள்ளது சாளுவன் குப்பம். அங்கே கடற்கரை அருகே உள்ள இந்திய தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள வளாகத்தில் உள்ளது அதிரணசண்ட மண்டபம் என்னும் குடைவரைக் கோயில் . அதன் எதிரே உள்ளது கிழக்கு நோக்கிய மகிஷாசுரமர்த்தினி திறந்தவெளி புடைப்புச் சிற்பம். 5' 9.5'' நீளம் x 2' 10" அகலம் உடையது.(1) சாளுவன்குப்பம் மகிஷாசுரமர்த்தினி புடைப்புச் சிற்பம் அசுரப் படையைத் தாக்கி முன்னேறும் தேவியின் படை சிற்பத்தின் பின் 3/2 பகுதியை நிறைக்கிறது. தோற்றோடும் அசுரப்படைக்கு முன் 1/3 பகுதி மட்டுமே. தன் படை நடுவில் ஆறு கை தேவி வெறிகொண்டு வாய்பிளந்து முன்னங்கால்களை உயர்த்திப்பாயும் சிங்கத்தின் மீது அமர்ந்துள்ளாள். வலது காலை வட்டவடிவ பீடம் ஒன்றின் மீது வைத்திருக்கிறாள். இடது கைகளுள் ஒன்றில் தூக்கிப் பிடித்த வில்லிருந்து வலது கை ஒன்றால் அம்புகளைத் தொடுக்கிறாள். இடது மேல் கையில் சங்கு. வலது கைகளில் சக்கரமும், வாளும். அவள் பின்னே நான்கு கணங்கள். மேலுள்ள கணம் தேவிக்கு வெண்கொற்றக் குடை பிடித்து சாமரம் வீசியவாறும், அதன் கீழ் ஒரு கணம் சங்கு ஒலித்த...