சாளுவன்குப்பம் மகிஷாசுரமர்த்தினி திறந்தவெளி புடைப்புச் சிற்பம்

கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கு 5 கிமீ வடக்கே உள்ளது சாளுவன் குப்பம். அங்கே கடற்கரை அருகே உள்ள இந்திய தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள வளாகத்தில் உள்ளது அதிரணசண்ட மண்டபம் என்னும் குடைவரைக் கோயில் . அதன் எதிரே உள்ளது கிழக்கு நோக்கிய மகிஷாசுரமர்த்தினி திறந்தவெளி புடைப்புச் சிற்பம். 5' 9.5'' நீளம் x 2' 10" அகலம் உடையது.(1)

சாளுவன்குப்பம் மகிஷாசுரமர்த்தினி புடைப்புச் சிற்பம்

அசுரப் படையைத் தாக்கி முன்னேறும் தேவியின் படை சிற்பத்தின் பின் 3/2 பகுதியை நிறைக்கிறது. தோற்றோடும் அசுரப்படைக்கு முன் 1/3 பகுதி மட்டுமே. தன் படை நடுவில் ஆறு கை தேவி வெறிகொண்டு வாய்பிளந்து முன்னங்கால்களை உயர்த்திப்பாயும் சிங்கத்தின் மீது அமர்ந்துள்ளாள். வலது காலை வட்டவடிவ பீடம் ஒன்றின் மீது வைத்திருக்கிறாள். இடது கைகளுள் ஒன்றில் தூக்கிப் பிடித்த வில்லிருந்து வலது கை ஒன்றால் அம்புகளைத் தொடுக்கிறாள். இடது மேல் கையில் சங்கு. வலது கைகளில் சக்கரமும், வாளும். அவள் பின்னே நான்கு கணங்கள். மேலுள்ள கணம் தேவிக்கு வெண்கொற்றக் குடை பிடித்து சாமரம் வீசியவாறும், அதன் கீழ் ஒரு கணம் சங்கு ஒலித்தவாறும், கீழே இரு கணங்கள் வாட்களை உயர்த்தியும் முன்னேறுகின்றன. தேவியின் முன் மேலும் கீழுமாக இரு கணங்கள்  வாளும் கேடயமும் கொண்டு முன்னேறுகின்றனர், நடுவில் சிங்கக் குட்டி ஒன்று மகிடனது வலது கையைக் கடிக்க, புறமுதுகு காட்டியோடும் எருமைத்தலையும் மனித உடலும் கொண்ட மகுடன் அதை இடது கையால் தள்ள முனைகிறான். அவன் கால்கள் மடிந்து நிலைதடுமாறி உள்ளான். அவன் முன்னே ஒரு பெரும் அரக்கனும் அவ்வாறே நிலை தடுமாறி ஒட முயல்கிறான். இவர்கள் தலைமேல் நான்கு அசுரர்களும் அவ்வாறே ஓடிக்கொண்டிருக்கின்றனர். அசுரர்கள் எவர் கையிலும் ஆயுதம் இல்லை.  ஒரு அற்புதமான இயங்கு சிற்பம்.

மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் உள்ள பெரிய மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தில் மகிஷன் கையில் தண்டத்துடன் இன்னும் போர்புரிந்து கொண்டிருக்கிறான். மற்ற அசுரர்களும் அவ்வாறே ஆயுதங்களுடன் உள்ளனர். சாளுவன் குப்பச் சிற்பம் அதற்கு அடுத்த காட்சியை, அவனும் மற்ற அசுரர்களும் போரில் ஆயுதங்களை இழந்து தோற்றோடுவதைச் சிறப்பாகச் சித்தரிக்கிறது. ஒரு அற்புதமான இயங்குநிலைச் சிற்பம்.

நன்றிக்கடன்

(1) சா பாலுசாமி; மாமல்லபுரம் புலிகுகையும் கிருஷ்ண மண்டபமும்; 4 ஆம் பதிப்பு; 2017

படிக்க












Comments

Popular posts from this blog

அதிரணசண்ட மண்டபம்