அதிரணசண்ட மண்டபம்
கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கு 5 கிமீ வடக்கே உள்ள சாளுவன் குப்பத்தில் கடற்கரை அருகே உள்ளது மாமல்லபுரத்தின் 14 மண்டபங்களுள் ஒன்றான அதிரணசண்ட மண்டபம். இந்திய தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள வளாகத்தில் புலிக்குகையின் தெற்கே அமைந்துள்ளது. அதன் வடக்கே வேறொரு வளாகத்தில் மேற்படி துறையினரால் அகழ்ந்தெடுக்கப்பட்ட பல்லவர் கால முருகன் கோயில் அடிப்பகுதிகள் உள்ளன.
அதிரணசண்ட மண்டபம் ஒரு முற்றுபெற்ற குடைவரை. குடைவரையும் கருவறையும் கிழக்கு பார்த்தன. முகப்பு, ஒரு மண்டபம், ஒற்றைக் கருவறை அமைப்பு கொண்டது.
![]() |
| அதிரணசண்ட மண்டபம் |
![]() |
| (fig24 p126; Architectural Survey Of Temples No 1 Cave Temples Of The Pallavas by KR Srinivasan 1964) |
முகப்பு
மண்டபத்தின் சுற்றுப் பகுதி உயர்ந்து விட்டதால் மண்டபத்தின் முன் உள்ள பகுதி அகழப்பட்டு பக்கச்சுவர்கள், ஒடுகள் பாவிய தரை, இறங்கி வர வடக்கு, தெற்கில் படிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. முன்புறத் தரையில் உள்ள லிங்க பாணம் பிற்காலத்தையது.
முகப்பு, தரைப்பகுதியையும், அதை நோக்கி கூரைப் பகுதியில் இருந்து சரிந்து இறங்கும் பக்கச் சுவர்களையும் கொண்டுள்ளது. இரு பக்கச் சுவர்களிலும், தரையின் தென் பக்கத்திலும் ஆக மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள் மூலம் இந்த மண்டபம் ராஜசிம்ம பல்லவன் என்னும் இரண்டாம் நரசிம்ம பல்லவன் (பொ.ஆ. 695 - 728) குடைவித்தது என்றும் இதன் ஆதி பெயர் 'அதிரணசண்ட பல்லவேஸ்வர கிருஹம்' என்றும் அறிகிறோம். 'அதிரணசண்ட' (அதி - மிகை , ரண - போர்களம், சண்ட - வல்லவன்) என்பது ராஜசிம்மனின் பட்டப் பெயர்களுள் ஒன்று.
முகப்பில் நான்கு தூண்கள் - 2 முழுத் தூண்கள், பக்கச் சுவர்களோடு ஒட்டிய இரு அரைத்தூண்கள். அவற்றிடையே மூன்று அங்கணங்கள். முழுத்தூண்கள் மகேந்திரர் கால 'சதுரம், எண்பட்டைக் கட்டு, சதுரம்' என்ற வடிவம் கொண்ட பருத்த தூண்கள். அரைத்தூண்கள் முழுதும் சதுர வடிவம் கொண்டவை.
தூண்கள் மீதுள்ள தரங்கப் போதிகைகள் (தரங்கம் = அலை) உத்திரத்தைத் தாங்குகின்றன. போதிகைகள் நடுப் பட்டை அற்றவை. பக்கத்திற்கு 8 அலைகள் கொண்டவை. உத்திரத்தின் மேல் வாஜனம், வலபி, கபோதம், பூமிதேசம் ஆகிய பிரஸ்தர உறுப்புகள் அமைந்துள்ளன. பூமிதேசம் பற்களாகச் செதுக்கப்பட்டுள்ளது.
மண்டபம்
முன்வரிசைத் தூண்களுக்குப் பின் ஒற்றை மண்டபம். 28' நீளம் x 6' அகலம் x 6.5' உயரம்.* இரண்டாவது வரிசைத் தூண்கள் இல்லை. மண்டபத்தின் பின் சுவரின் நடுவில் ஒற்றைக் கருவறை. கருவறை மண்டபத்தினுள் 1.5' முன்துருத்திக் கொண்டுள்ளது.#
கருவறை வாயிலின் பக்கங்களில் இருகை வாயிற்காவலர்கள் பக்கத்திற்கொருவராகக் காணப்படுகின்றனர். ஒரு கை கதையின் மீது இருக்க மற்ற கை சூசி முத்திரை காட்டுகிறது
வாயிற்காவலர்களுக்கும் பக்கச் சுவர்களுக்கும் இடையில் இரண்டு பக்கமும் சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பத்தொகுதி உள்ளது. இவ்வாறு அர்த்த மண்டபச் சுவரில் சோமஸ்கந்தர் அமைந்திருப்பது இந்த கோயிலின் தனிச் சிறப்பு. மற்ற எந்த பல்லவர் கால கோயிலிலும் இல்லாதது.
![]() |
| மண்டப தெற்குப் பின்சுவர் சோமாஸ்கந்தர் |
மண்டபத்தின் கூரையில் முற்றுபெறாத பணிகள் வடக்குப் பக்கத்தில் வெட்டப்படவேண்டிய சதுரங்களாக காட்சி அளிக்கின்றன. இந்த சதுரங்கள் குடைவரைகள் வெட்டப்பட்ட விதத்தையும் காட்டுகின்றன.
கருவறை
இங்கு காணப்படும் கல்வெட்டில், `சிவன் உமையோடும் குகனோடும் எப்பொழுதும் இங்கு தங்கியிருக்கட்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதி கருவறைப் பின் சுவற்றில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
![]() |
| கருவறை சோமாஸ்கந்தர் |
நான்கு கை சிவன் இடது காலை கீழேசுகாசனத்தில் அமர்ந்திருக்கிறார். சிவன் தலையின் வலப்புறம் நான்முகனும், இடப்புறம் திருமாலும் சிவனை வாழ்த்திய நிலையில் உள்ளனர். இரு கை உமை சிவனை நோக்கி திரும்பியவாறு அமர்ந்திருக்க இடையில் தாயின் மடியில் குழந்தை குகன்.
தூண்கள் பல்லவர் ஆட்சியின் முந்தைய காலத்தையும், சோமஸ்கந்தர் சிற்பம் சற்றே பிந்தைய காலத்தையும் குறிக்கின்றன.
கருவறையின் நடுவில் உள்ள குழியில் நடப்பட்டிருக்கும் 16 பட்டை லிங்கம் பிற்காலத்தையது.
கல்வெட்டுகள்
அதிரணசண்ட பல்லவேஸ்வர க்ருஹம் என்ற இக்குடைவரை இராஜசிம்ஹனின் விருதுப் பெயரான 'அதிரணசண்ட' என்ற பெயருடன் தொடர்புடையது.
மண்டப முகப்பிலிருந்து அரைத்தூண்களையொட்டி வெளிப்புறம் நோக்கி சரியும் மண்டபத்தின் இரு பக்கச் சுவர்களில் இரு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன - வடபுறம் 16 வரி, 6 செய்யுள் தேவநாகரிக் கல்வெட்டு, இந்தக் கல்வெட்டைத் தென் இந்தியாவிலேயே மிகப் பழமையான தேவ நாகரி எழுத்து எனலாம். தென்புறம் 17 வரி 7 செய்யுள் பல்லவ கிரந்தக் கல்வெட்டு. இரண்டிலும் உள்ளது சிறு வேறுபாடுகளுடன் கூடிய ஒரே சம்ஸ்கிருத சுலோகம்.
![]() |
| தென்புற பல்லவ கிரந்தக் கல்வெட்டு |
![]() |
| வடபுற நாகரிக் கல்வெட்டு |
பல்லவ கிரந்தக் கல்வெட்டின் ஐந்தாம் செய்யுளில், “இப்பூவுலகை ஆள்பவர்களின் தலைவராகிய அதிரணசண்ட இக்கோவிலை அதிரணசண்டேஸ்வரருக்குக் கட்டுவித்தார். இங்கு பசுபதி மலைமகளான பார்வதியுடனும், குகன், கணங்கள் சூழ தங்கி மகிழ்வாராக' என்று கூறப்பட்டுள்ளது.
अतिरणचण्ड पतिरवनिभुजाम् अतिरणचण्डेश्वरम् इदं अकरोत् ।
इह गिरितनया गुहगणसहितो नियतकृतरति भवतुपशुपतिः ॥
AthiranchandaH pathiravanibhujaam AthiranchandEshvaram idam akarOt
Iha giritanaya guha gaNa sahitOH niyatakRtarati bhavatu pashupatiH
(திரு.ஆர். கோபு; Athiranchanda Surprise – Babington’s Gift)
'அதிரணசண்டபரமேஸ்வரகிரகம்' என்ற இரு பெயர்க் கல்வெட்டுகள் மண்டப முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளன.
![]() |
| முற்றத் தரை தமிழ்க் கல்வெட்டு |
மண்டப முற்றத் தரையில் முதலாம் ராஜராஜ சோழனின் தமிழ்க் கல்வெட்டு உள்ளது. அதிரணசண்டேச்சுரத்து மகாதேவர் கோயிலுக்கு நந்தா விளக்கு எரிக்க 90 சாவா மூவாப் பேராடுகள் தானமாகக் கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டில் சாளுவன்குப்பம் 'ஆமூர் கோட்டத்து ஆமூர் நாட்டு திருவிழிச்சில்' என்று குறிக்கப்பட்டுள்ளது.
நன்றிக்கடன்
அகரம்; மாமல்லபுரம் அதிரணசண்ட குடைவரைக் கோவில்: மேல்நாட்டு ஆய்வாளர் குறிப்பிடும் மூன்று கல்வெட்டுகள்.
https://chithirampesuthada.com/pallava-temples/mamallapuram-salavankuppam-atiranachanda-cave-temple/
https://www.tamildigitallibrary.in/inscriptions-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lxyy
பார்வை
Srinivasan, K R (1964). Cave-Temples of the Pallavas. Archaeological Survey of India. New Delhi. p 125 - 130
கொசுறு
மேலும் இரு மாமல்லபுரத்துக் கோயில்களில் இங்குள்ள கல்வெட்டுகளின் செய்யுள்கள் இடம்பெற்றுள்ளன. பல்லவ கிரந்தக் கல்வெட்டில் உள்ள 7 செய்யுள்களுள் முதலிரண்டு செய்யுள்கள் அப்படியே மாமல்லபுரம் தர்மராஜ மண்டபத்திலும், கணேச இரதத்திலும் உள்ள கல்வெட்டுக்களில் 8, 9 ஆம் செய்யுள்களாகவும், நான்காம் செய்யுள் இரண்டிலும் நான்காம் செய்யுளாகவும் இடம்பெறுகின்றன.
இக்கல்வெட்டுகளில் ராஜசிம்மனின் ‘அத்யந்தகாம’, ‘ஸ்ரீநிதி’, ‘ஸ்ரீபரா’, ‘காமராஜா’, ‘தனஞ்சய’ மற்றும் ‘சங்க்ரம்தீர’ போன்ற விருதுப் பெயர்கள் (பிருடா) குறிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுப் பெயர்களில் 'அத்யந்தகாம' (முடிவில்லாத மன எழுச்சி உடையவன்) என்ற விருதுப்பெயர் தனிச் சிறப்பானது. காஞ்சி கைலாசநாதர் கோவில் என்ற ராஜசிம்மேசுவரக் கல்வெட்டு 'உக்ரதண்டனிடமிருந்து கடமை உணர்வு மிக்க ஸ்ரீஅத்யந்தகாமன் பிறந்தார்' என்று தெரிவிக்கிறது. மாமல்லபுரத்தின் அத்யந்தகாம பல்லவேசுவர கிருஹக் கல்வெட்டு 'ரணஜயன் என்ற பெயரால் புகழடைந்தவரான அரசர் அத்யந்தகாமன் இந்த சிவன் கோயிலைச் செய்வித்தார்' என்று குறிப்பிடுகிறது.
காணாமல் போன கல்வெட்டுகள்
மண்டபத்தின் பக்கச் சுவர்களில் உள்ள இரு சமஸ்கிருத கல்வெட்டுகள் தவிர மூன்றாவதாக ஒரு கல்வெட்டு இருந்ததாக 1828 இல் இரு ஆங்கிலேயர்கள் பதிவு செய்துள்ளனர்.
| பல்லவ கிரந்தக் கல்வெட்டு |
| நாகரிக் கல்வெட்டு |
| மூன்றவது கல்வெட்டு |
1828 க்குப் பிறகு இந்த மூன்றாவது கல்வெட்டு காணக்கிடைக்கவில்லை.
மேலதிக விவரங்களுக்கு: அகரம்; மாமல்லபுரம் அதிரணசண்ட குடைவரைக் கோவில்: மேல்நாட்டு ஆய்வாளர் குறிப்பிடும் மூன்று கல்வெட்டுகள்.
மாமல்லபுரத்தில் அமைந்துள்ள குடைவரைக் கோவில்கள், ஒற்றைக்கல் கோவில்கள், கட்டுமானக் கோயில்களை கட்டியவர் யார்?
மாமல்லபுரம் குடைவரைகள் முதலாம் மகேந்திரவர்மன் (பொ ஆ 590-630) காலத்திற்குப் பிந்தியவை என்பது உறுதி. மாமல்லபுரத்திலுள்ள 'பஞ்சபாண்டவ' ஒற்றைக்கல் கோயில்களை அவரது மகன் முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லன் (பொ ஆ 630 - 668) கட்டியதாக சில அறிஞர்கள் கூறி வந்தார்கள். பிற குடைவரைக் கோவில்களையும், வேறு சில ஒற்றைக்கல் இரதங்களையும் முதலாம் நரசிம்மவர்மனுடைய பேரன் முதலாம் பரமேஸ்வரவர்மனும் (பொ ஆ 669 - 690), அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மனும் (பொ ஆ 690 - 728) கட்டியதாகவும் பல அறிஞர்கள் கருதுகிறார்கள். குறிப்பாகக் கணேச இரதம், கடற்கரைக் கோயில் ஆகிய கட்டுமானக் கோயில்கள் ராஜசிம்மனால் கட்டப்பட்டுள்ளது என்பது பற்றி ஒருமித்த கருத்து உள்ளது . ஆனால் தொல்லியல் அறிஞர் டாக்டர் ஆர்.நாகசாமியோ, மாமல்லபுரத்திலுள்ள குடைவரைகள், ஒற்றைக்கல் இரதங்கள் கட்டுமானக் கோயில்கள் ஆகிய எல்லாமே ராஜசிம்மனாலேயே கட்டப்பட்டவை என்கிறார். இது பற்றி 1962 ஆம் ஆண்டிலேயே R. Nagaswamy. Mahabalipuram: (Monumental Legacy). OUP India Monumental Legacy Series. 978-0-19-807127-3 108 pages என்ற ஆய்வுக்கட்டுரை பல விவாதங்களை எழுப்பியது.
பல்லவ கிரந்தக் கல்வெட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு
- Verse 1 & 2 – Just as in a large lake, filled with water (which is fit) for bathing, (and) covered with various lotus-flowers, handsome Samkara (Siva) abides on the massive head – sprinkled with the water of coronation (and) covered with bright jewels of the glorious Atyantakama, who deprives (his) enemies of (their) pride, who is receptacle of wealth (Srinidhi), who possesses the charm of love (Kamaraga) (and) who assiduously worships Hara (Siva)
- Verse 3 – For the welfare of the earth, he who is standing at the head of the lords of the earth caused to be made this house of Sambhu (Siva), which resembles (the mountain) Kailasa and Mandara
- Verse 4 – Let the Sribhara be victorious for a long time, who bears Bhava (Siva) in (his) mind which is humbled with devotion, and (who bears) the earth on (his) arms like a coquettish ornament
- Verse 5 – Atiranachanda, the lord of the rulers of the earth, made this (temple called) Atiranachandesvara. Let Pasupati (Siva) attended by the mountain-daughter (Parvati), Guha (Skanda), and the demi-gods (Gana), always take delight (in residing) here!
- Verse 6 – let the eight-formed lord of beings (Siva) take up (his) abode for a long time in this temple (called) Atiranachandesvara, which was caused to be built by him who, together with the name Atiranachanda, owe deep devotion to Isana (Siva), abundant wealth, the heavy burden of the earth and unequaled liberality, (and) who is renowned by the name Ranajaya, (and) Anugrasila.
- Verse 7 – Who is able to master the name of Kalakala, unless the performer (were) Bharata, Hari, Narada, or Skanda. Samaradhanamjaya (Arjuna in battle), Samgramadhira (he who is firm in war)







Comments
Post a Comment